என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் எம்எல்ஏ"
சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதற்கான நில அளவீடு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த நில உரிமையாளர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ்மானூஸ், மாணவி வளர்மதி, அரசியல் கட்சி பிரமுகர்கள் முத்துக்குமார், மாரிமுத்து உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே 8 வழி சாலைக்கு எதிராக பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழி சாலைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும் அதனை எதிர்த்து போராடிய போது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர் காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா, சவுந்தர் ஆகியோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கையும் நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.
அப்போது இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்த போலீசாரின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொது மக்களை கைது செய்த போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதனால் விரைவில் இது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.
சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தன்னை தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் செங்கம் கரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி எனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது செங்கம் டி.எஸ்.பி.யாக இருந்த சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் 8 வழி சாலைக்கு எதிராக போராடியதாக கூறி என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். என் மீது பொய் வழக்கும் போட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி ஆகிய 3 பேரும் டிசம்பர் மாதம் 12-ந் தேதி மாநில மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #Greenwayroad
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் அந்த பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் பல்வேறு வியாதிகள் பரவி வருவதாக கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அந்த போராட்டக்குழு சார்பில் நேற்று அந்த ஆலை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார், இந்த முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். இதையடுத்து காரைக்குடி மற்றும் கோவிலூரில் உள்ள ஆலை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் கழனிவாசல் வழியாக பேயன்பட்டி பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் போலீசார் தரப்பில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் உள்பட 8 துணை சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள், 136 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காந்திய தொண்டர் மன்ற ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, முன்னாள் கவுன்சிலர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அழகப்பன், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சகுபர்சாதிக், அழகன் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும்போது முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தலைமையில் சென்ற ஒரு பகுதியினர் அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழ.கருப்பையா, காந்திய தொண்டர் மன்ற நிர்வாகி விஜயராகவன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் வேணுகோபால், தாலுகா செயலாளர் தட்சணாமூர்த்தி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அடையகருங்குளத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மாடசாமி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் வந்து மாமூல் கேட்டதாக தெரிகிறது.
அதற்கு மாடசாமி ஏற்கனவே மாமூல் வாங்கி சென்றுவிட்டனர் என கூறியுள்ளார். இதனால் அந்த கும்பல் விற்பனையாளர் மாடசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது. இதுபற்றி சிங்கை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். இதனிடையே முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அந்த கடையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. இதுபற்றி போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கமலா அறக்கட்டளையின் சார்பில் லாஸ்பேட்டை தொகுதியின் நெசவாளர் நகர், ஆனந்தா நகர், நந்தா நகர், பெத்துசெட்டிப்பேட்டை, வள்ளலார் நகர், மகாவீர் நகர் ஆகிய பகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், பெத்துசெட்டிப்பேட்டை திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கமலா அறக்கட்டளையின் முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். மனோகர் வரவேற்றார். கமலா அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.
லாஸ்பேட்டை தொகுதியில் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து கரடுமுரடாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதி படுகிறார்கள். தொகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, மேலும் சாலையில் உள்ள மின் விளக்குகள் பெரும்பாலானவை எரியாத மின் விளக்குகளாக உள்ளன.
தண்ணீர் வரவில்லை என்றால் பெண்கள் உடனடியாக என் வீடு தேடி வந்து சொல்வர். உடனடியாக அதனை சரிசெய்து இருக்கின்றேன். ஆனால் தற்போது அந்த நிலையில்லை. தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. எங்கு இருக்கிறார்? என தெரியவில்லை, மக்கள் படும் துன்பங்களை அவர் உணரவில்லை.
இதுவே நமது ஆட்சிக் காலமாக இருந்தால் சாலைவசதியாக இருந்தாலும் சரி, மின்சார வசதியாக இருந்தாலும் சரி நாம் அதனை உடனுக்குடன் சரி செய்தோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நமது தொகுதிக்கு நன்மை செய்யக்கூடிய வேட்பாளரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜனார்த்தனன், ஆசிரியர் தயாநிதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சிகளை கோ. செழியன் தொகுத்து வழங்கினார். ராமநாத சுவாமி நன்றி கூறினார். #tamilnews
சென்னை:
பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவருக்கு நீண்ட நாட்களாகவே நுரையீரல் பாதிப்பு இருந்தது. கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கொண்டு செல்லப்பட்டது. நாளை உடல் தகனம் நடக்கிறது.
ஜெ.குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் 2 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து சொந்த ஊரான காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கடைகளும் அடைக்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்கு 3 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.
பண்ருட்டி, புதுநகர், முதுநகர், ரெட்டிச்சாவடி, சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீதும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 பஸ்கள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் என்ற இடத்தில் நெய்வேலியில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்சும், திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் சென்ற பஸ்சும், சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை சென்ற பஸ்சும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.
திண்டிவனத்தை அடுத்த காளை பகுதியில் சென்ற சென்ற பஸ் நள்ளிரவில் கல்வீசி உடைக்கப்பட்டது. செஞ்சியில் 3 பஸ்கள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பஸ்கள் சேதம் அடைந்தது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, அரியலூர், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பகுவிக்கப்பட்டனர்.
பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன.
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தனியார் கம்பெனியில் இருந்து ஆட்கள் ஏற்றிச் சென்ற 3 பஸ்கள் மீது 6 பேர் கும்பல் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. அருகில் இருந்த 2 பேக்கரி கடைகள் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கி தப்பி சென்று விட்டனர்.
சேலம் சீல நாயக்கன்பட்டி பைபாசில் சென்னையில் இருந்து கோவை சென்ற பஸ் உடைக்கப்பட்டது. டால்மியா அருகே பெங்களூர் சென்ற ஆம்னி பஸ்சும் கல்வீசி தாக்கப்பட்டது.
மேச்சேரி, காடையாம்பட்டி, தீவட்டிபட்டி, ஆத்தூர் பகுதியில் 7 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. மொத்தம் 9 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 9 பஸ்கள் உடைக்கப்பட்டன. காட்பாடியை அடுத்த லத்தேரி வழியாக சென்ற 2 பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு சென்ற அரசு பஸ் மீது மேல்விஷாரத்தில் கல்வீசப்பட்டது. ஆற்காட்டில் மட்டும் 3 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது.
வாலாஜாவில் ஒரு பஸ்சும் அரக்கோணத்தில் ஒரு பஸ்சும் உடைக்கப்பட்டது. விரிஞ்சிபுரத்தில் ஒரு அரசு பஸ் மீது கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பஸ்கள் மீது கல் வீசி உடைக்கப்பட்டது. கலசப்பாக்கத்தில் ஒரு பஸ், வந்தவாசி மற்றும் அதனருகே உள்ள பொன்னூரில் 5 பஸ்கள், மங்கலத்தில் ஒரு பஸ், போளூரில் 1 பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வேலூரில் இருந்து ஆரணி சென்ற தனியார் பஸ் அடுக்கம்பாறை அருகே கல்வீசி உடைக்கப்பட்டது. போளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசு பஸ்சை மடக்கி சிலர் தாக்க முற்பட்டனர். போலீசார், அவர்களை சமரசம் செய்து தாக்குதலை தடுத்தனர்.
வந்தவாசி பஜார் வீதி, மேல்மருவத்தூர் ரோட்டில் கடைகளை அடைக்குமாறு பா.ம.க.வினர் திரண்டு வந்து வியாபாரிகளிடம் கூறினர். இதையடுத்து வந்தவாசி நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
ஆரணியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர் அருகே பத்தகப்பட்டி என்ற இடத்தில் அரசு டவுன் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் வள்ளாலகாம் சிவபிரியா நகரில் இன்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தி ஓடி விட்டனர்.
கும்பகோணம் சுவாமி மலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. திருவையாறு மெயின் ரோடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #PMK #KaduvettiGurudeath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்